திருப்பியடித்த இந்தியா… 317 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் 329 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 59.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஸ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
195 என்ற முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை நேற்று ஆட துவங்கிய இந்திய அணி அஸ்வினின் அபார சதத்தால் 286 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட 481 ரன்கள் முன்னிலையில் இருந்தது, இங்கிலாந்து அணிக்கு வெற்றிபெற 482 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.

482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்களை இழந்தது.3 ஆம் நாள் ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.
இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டேன் லாரன்சின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். வழக்கத்திற்கு மாறாக பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடி ஆட்டத்திற்கு பதிலாக தடுப்பட்டதை வெளிப்படுத்தி 51 பந்துகள் சந்தித்து 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது ஸ்லிப் திசையில் இருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அஸ்வின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழப்பது இதனுடன் சேர்த்து 10 ஆவது முறையாகும்.
நிலைத்து ஆடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 33 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போல மொயின் அலி 9 விக்கெட்கள் விழுந்த பிறகு அக்சார் படேலின் ஓவரில் (52 ஆவது ஓவர்) ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார், இறுதியில் குல்தீப் யாதவின் பந்தில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 18 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார் இதில் 3 பௌண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இங்கிலாந்து சார்பாக மெயின் அலியின் 43 ரன்களே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இறுதியாக இங்கிலாந்து அணி 54.2 ஒவரில் 164 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 317 ரன்கள் என்ற மாபெரும் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
இந்திய அணி சார்பாக அக்சார் படேல் 5 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் மற்றும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருது பல்துறை ஆட்டக்காரர் அஸ்வினுக்கு கொடுக்கப்பட்டது. அஸ்வின் 8 விக்கெட்களையும் 106 ருண்களையும் எடுத்து பேட்டிங் பௌலிங் என இரு துறையிலும் சிறப்பாக விளையாடினார்.
ரோஹித் சர்மாவுக்கு ஆட்டத்தை மாற்றியவர் (Game Changer ) விருது அளிக்கப்பட்டது.
Comment here